Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 2 பாலைநிலம்

விவிலியத்தை அடித்தளமாக கொண்டு வாழும் மக்களுக்கு, நம்பிக்கை மக்களுக்கு பாலைநில அனுபவம் இன்றியமையாத ஒன்று. கடவுள் எல்லாரையும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

· ஆபிரகாமும் சாராவும் பாலைநிலத்தில் சுற்றித் திரிகிறார்கள்: “நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டிற்கு இறங்கிச் சென்றார்” (இச 26:5).

· மோசே நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தார். இஸ்ராயேல் மக்களும் அதே போல பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

· எலியா, எலிசா இறைவாக்கினர்கள் தங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் வரும்பொழுது பாலைநிலத்திற்குச் சென்று இறைவனிடம் பதில் தேடினார்கள்.

· தாவீது அரசன் பாலைநிலத்தில் சவுலால் விரட்டப்பட்ட பொழுது அலைந்து திரிந்தான்.

· அதே போல் புதிய ஏற்பாட்டிலும் திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தையே தனது வாழ்விடமாக ஆக்கிக் கொண்டார்.

· இயேசுவும் நாற்பது நாள்கள் பாலைநிலத்தில் தனித்திருந்து செபித்தார்.

· பவுலடிகளாரும் இறையனுபவம் பெற்றப் பிறகு மூன்று ஆண்டுகள் பாலைநிலத்தில் தனித்திருந்ததாக சொல்கிறார் (கலா 1:15-20).

இவ்வாறாக, விவிலியம் சார்ந்த மக்களனைவருக்கும் பாலைநில அனுபவம் ஒரு அடித்தள அனுபவமாக இருக்கிறது.

அப்படி பாலைநிலத்தில் என்ன இருக்கிறது? அங்கு ஒன்றுமில்லை. நீரில்லை, உணவில்லை, உறங்க உறைவிடமில்லை, உறவு கொள்ள உறவினர்கள் இல்லை. அங்கே எல்லாம் வெறுமைதான். ஆனால் விவிலிய மக்களாகிய நமக்கு அங்குதான் இறைவன் நிறைந்திருக்கிறார்.

ஏன் இறைவன் இஸ்ராயேல் மக்களை பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்?

“உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களை கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் அவர் சோதித்தார். அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்கு பசியை தந்தார். ஆனால் மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கிறான்” (இச 8:2-4).

ஆக, இறைவன் பாலைநிலத்திற்கு மக்களை அழைத்துச் செல்வது அவர்களை எளியவராக்க,அவர்களை சோதிக்க, அவர்களுக்கு உயிர் கொடுக்க. பாலைநில அனுபவம் இந்த இறையனுபவத்தை கொடுக்க வேண்டும். மேலும், ஒசேயா இறைவாக்கினர் 2:14 ல் வாசிக்கிறோம்: “ஆதலால் நான் அவளை நயமாக கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளை கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்.”

இறைவன் பாலைநிலத்தில் இருக்கிறார். அவர் நம்மை அழைத்துச் செல்வது நம்மோடு பேசுவதற்காகவே. நம்மோடு உறவுகொள்ள, நமக்கு அவர் அனுபவத்தை தர.

அன்புக்குரியவர்களே! இந்த தவக்காலத்தின் நாற்பது நாள்களில் நாமும் இந்த பாலைநில அனுபவம் பெற வேண்டும். நம்முடைய நம்பிக்கையை ஆழப்படுத்த, இறையனுபவத்தை புதுப்பிக்க, இறைவனோடு பேச,இறைவனுக்கு செவிமடுக்க.

ஆகவே, இந்த நாற்பது நாள்களில் நாம் ஒரு நாளாவது பாலைநிலம் நோக்கிச் செல்வோமா? அது நம்முடைய ஆலயமாக இருக்கலாம், அல்லது நமது வீடாக இருக்கலாம், நம்முடைய தோட்டமாக இருக்கலாம். ஆனால் நாம் தனித்துச் செல்ல வேண்டும். யாருடனும் பேசக் கூடாது. இறைவன் ஒருவனோடு மட்டும் தனித்திருந்து உறவாடுவோம். கண்டிப்பாக இந்த அனுபவம் நமக்கு புதுமைகள் பல செய்யும்.

Rev. Fr. James Theophilus SDB