Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 6 தருமம்

இரக்கத்தினால் உந்தப்பட்டு தேவையில் இருப்பவர்களுக்கு பொருள்களையோ, பணத்தையோ கொடுத்து உதவுவது தான் தருமம் ஈதல் எனப்படும். இதுவும் ஒரு அறச்செயலே. எல்லா மதங்களிலும் உள்ள அடித்தளமான பக்திமுயற்சிகளில் இதுவும் ஒன்று. தருமம் ஈதல் என்ற தமிழ் வார்த்தைக்கு உள்ள நேர் மொழிபெயர்ப்பான கிரேக்க வார்த்தை இரக்கத்தை பரிமாறுதல் என்ற பொருளை கொண்டிருப்பது முக்கியமானதாகும்.

யூத-கிறிஸ்தவ கலாச்சாரங்களில் தருமம் ஈதல் தொன்றுதொட்ட காலத்திலிருந்து வாழ்ந்து காட்டப்படுகிற பழக்கவழக்கமாகும். விவிலியத்தின் முதல் வரலாற்று மனிதன் ஆபிரகாம் தொடங்கி இப்பழக்கம் இருப்பதாக விவிலியம் சொல்கிறது (தொநூ 18:1-15).

தருமம் ஈதல் இறைவனை போற்றுவதற்கு சமமாகும்.
· “ஏழையை ஒடுக்குகிறவர் அவரை உண்டாக்கியவரை இகழ்கிறார்; வறியவருக்கு இறங்குகிறவர் அவரை போற்றுகிறார்” (நீதிமொழி 14:31).
· “ஏழைக்கு இறங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பி தந்துவிடுவார்” (நீதிமொழி 19:17).
· “ஏழை கூக்குரல் இடும்போது எவன் காதை பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்கு செவிகொடுக்க மாட்டார்” (நீதிமொழி 21:13).
· “கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார். அவரே ஆசி பெறுவார்” (நீதிமொழி 22:9).
· “ஏழைகளின் உரிமைகளை காப்பதில் நேர்மையாளர் அக்கறைக் கொள்வார்; இவ்வாறு அக்கறைக் கொள்வது பொல்லாருக்குப் புரியாது” (நீதிமொழி 29:7).

ஏழைகளுக்கு உதவுவதை, இரக்கம் காட்டுதலை, தருமம் ஈதலை கடவுள் சட்டங்களில் ஒன்றாக பழைய ஏற்பாடு முன்வைக்கிறது.
· “உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும்போது வரப்பு ஓரக் கதிரை அறுக்க வேண்டாம்; சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்க வேண்டாம். திராட்சைத் தோட்டத்தின் பின்னறுப்பு வேண்டாம்; சிந்திக் கிடக்கும் பழங்களை பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும், அன்னியோருக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்” (லேவி 19:9-10).
· “ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து அதன் விளைச்சலை நீ சேமித்து வைப்பாய். ஏழாம் ஆண்டு அதை, ஓய்வு கொள்ளவும், தரிசாகக் கிடக்கவும் விட்டுவிடுவாய். உன் மக்களில் வறியவர்கள் தானாக விளைவதை உண்ணட்டும். அவர்கள் விட்டு வைப்பதை வயல்வெளி உயிரினங்கள் உண்ணும், உன் திராட்சைத் தோட்டத்திற்கும், உன் ஒலிவத் தோட்டத்திற்கும் இவ்வாறே செய்வாய்” (விப 23:10-11).
· “அடிமைக்கு உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அனுப்பும்போது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன் கலத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்கு கொடுத்து அனுப்பு” (இச 15:13-14).

இயேசுவும் அவருடைய சீடர்களும் இந்தப் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தார்கள் என்று யோவான் 12:6 ல் கூறப்படுகிறது. அதேபோல நம்பிக்கை மக்களும் இந்தப் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தார்கள் என்று பவுலடிகளார் கூறுகிறார்.
· “ஏழைகளுக்கு உதவி செய்ய மறக்க வேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை செய்வதில் நான் முழு ஆர்வத்துடன் இருந்தேன்” (கலா 2:10).
· “யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இரக்கச் செயல்கள் புரிவதில் முற்றிலும் ஈடுபட்டிருந்தார்” (திப 9:36).

ஏன் விவிலியம் தருமம் ஈதலை முன்வைக்கிறது?
1. மத்தேயு 6:1-4 ல் நான்கு முறை தருமம் ஈதல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அங்கே இயேசு தருமம் ஈதலை கடவுள் தான் பார்க்க வேண்டும் மனிதன் அல்ல என்று கோடிட்டு காட்டுகிறார்.
2. லூக்கா 11:40-42 ல் இயேசு பரிசேயர்களை சாடுகிறார். நீதியும், அன்பும் இல்லையேல் அது தருமச் செயலாக இருந்தாலும் அது இரக்கச் செயல் அல்ல.
3. லூக்கா 12:32 ல் தருமம் ஈதல் தான் சீடத்துவத்திற்கு அடிக்கல்லாக இருக்கிறது என்று அந்த பணக்கார இளைஞனிடம் கூறுகிறார்.
4. திருத்தூதர் பணி 3ம் அதிகாரத்தில் பேதுரு எருசலேம் கோவிலில் செபிக்க செல்லும் பொழுது தன்னிடம் பொன்னோ, வெள்ளியோ இல்லை என்றுக் கூறி ஊனமுற்றவரை நடக்கச் செய்கிறார். இது தருமம் ஈதல் என்பது ஒரு புதுமை செய்வதைப் போல ஒரு அறச் செயல் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

இரக்கச் செயல்கள் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் வெளிப்பாட்டுச் செயல்கள் ஆகும். இந்த தவக்காலத்தில் நாமும் கிறிஸ்துவை வெளிப்படுத்த அதுவும் நமது அருகிலுள்ள ஏழை, எளியவருக்கு வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம். தருமம் ஈதல் தான் வழி.