Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 7 சோதிக்கப்படுதல்

தவக்காலச் சிந்தனைகள் – 7 சோதிக்கப்படுதல்

நாம் அனைவரும் சோதிக்கப்படுகிறோம். பல நிலைகளில், பல சூழ்நிலைகளில், பல நபர்களால், பல நிகழ்வுகளால் நாம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம்.

நம்பிக்கை மக்களாகிய நமக்கு இறைச் சித்தத்திற்கு எதிராக அல்லது இறைத் திட்டத்திற்கு புறம்பே செயல்படும்போது சோதிக்கப்படுகிறோம் எனச் சொல்லலாம். தவறிய பிறகுதான் குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. இதற்கு சிறந்த எடுத்துகாட்டு நம்முடைய முதல் பெற்றோர்களே (தொநூ 3). அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள், இறைச் சித்தத்திற்கு எதிராக (கட்டளைக்கு) அவர்கள் செயல்படுகிறார்கள். அதன்பிறகு குற்ற உணர்வு அவர்களை ஆட்கொள்கிறது. அவர்கள் ஓடி ஒளிகிறார்கள்.

ஆனால் தொடக்கநூல் 39:6 ல் யாக்கோபின் மகன் யோசேப்பு சோதனையில் மாட்டுகிறான். ஆனால் அவன் சோதனையை தவிர்த்து வெற்றி பெறுகிறான். இதுவே, அவனுடைய பிற்கால வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது என்றும் சொல்லலாம். இஸ்ராயேல் மக்கள் பாலைநிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது கடவுளையே சோதிக்கிறார்கள் (விப 17:1-7). மாசா என்ற இடத்தில் இஸ்ராயேல் மக்கள் தண்ணீர் கேட்டு இறைவனை சோதிக்கிறார்கள். “நீங்கள் என்னோடு வாதாடுவது ஏன்? ஆண்டவரை ஏன் சோதிக்கிறீர்கள்?” இங்கும் இஸ்ராயேல் மக்கள் இறைவன் மேலுள்ள நம்பிக்கையை இழந்து சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இஸ்ராயேல் மக்கள் வரலாறு முழுவதுமே ஒரு தொடர் சோதனை போராட்டமாகத் தான் இருக்கிறது. வரலாற்று நூல்கள் முழுவதுமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் பிற கடவுளை நம்புகிறார்கள். பிற கடவுளை வழிபடுகிறார்கள். ஆகவே தான் இறைவாக்கினர்கள் தோன்றி அவர்களை மீண்டும் உண்மை கடவுள், ஒரே கடவுளிடம் கொண்டு வருகிறார்கள் (1அரசர் 18). ஓசேயா இறைவாக்கினர் இஸ்ராயேல் மக்களை சாடும்பொழுது நீங்கள் மதத்தில் வேசித்தனம் பண்ணிவிட்டீர்கள் என்ற கருத்தை முன்வைப்பார். ஆக, பழைய ஏற்பாடு முழுவதுமே இஸ்ராயேல் மக்களிடத்திலுள்ள இந்த ஒரு போராட்டத்தை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும் நன்மை-தீமை என்ற இரண்டு சக்திகளுக்கிடையே மாட்டிக் கொள்கிறான் அல்லது கடவுள்-தீயோன் (சாத்தான்) என்ற இருவருக்கும் பணிவிடை செய்ய முடியாது என்ற நிர்ப்பந்தத்தில் யாருக்காவது ஒருவருக்கே பணிவிடை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான் (மத் 6:24 – “எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது… நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது”).

இந்த மறக்க முடியாத உண்மையை பவுலடியார் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை வைத்தே பேசுகிறார். உரோமையர் 7:14-25 ல் பவுலடிகளார் தன்னுள்ளே இரண்டு சக்திகள் (நல்லது தீயது) போட்டி போட்டு கொண்டே இருக்கிறது. எதை செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்ய இயலவில்லை. எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன் என்று புலம்புகிறார். அந்தோ! இரக்கத்தக்க மனிதன் நான். யார் என்னை விடுவிப்பார் என்ற கேள்வியைக் கேட்டு அதற்குப் பதில் அவரே கூறுகிறார் இயேசு கிறிஸ்து ஒருவர் தான் என்று.
· “நீ இளைய வயதின் இச்சையை விட்டு ஓடிவிடு. தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவருடைய பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு”(2 திமொ 2:22). இங்கே பவுலடிகளார் தீமையை தவிர்த்து நன்மையை நாட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறார்.
· “உங்கள் மனது ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்”(மாற்கு 14:38). சோதனையிலிருந்து விடுபட செபம் செய்தலை ஒரு வழியாக மாற்கு நற்செய்தியாளர் முன்வைக்கிறார்.
· “உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்கள் வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்கு உள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதை தாங்கிக் கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருளுவார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்”(1 கொரி 10:13). கடவுள் தான் சோதனையிலிருந்து நம்மை மீட்டெடுப்பவர் என்ற உண்மையை பவுலடிகளார் முன்வைக்கிறார்.
· “…எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் (லூக்கா 21:34-36). சோதனை வேளைகளில் விழிப்பாயிருக்க இயேசு நம்மை அழைக்கிறார்.
அன்புக்குரியவர்களே! சோதனைக்குட்படுவது மனித இயல்பு. ஆனால் சோதனைக்கு அடிமையாதல் இறைவனை மறுப்பதாகும். சோதனை வேளைகளில் விழிப்பாயிருந்து செபித்தல் மூலம் சோதனையை தவிர்ப்பதே இறைவனை ஏற்றுக் கொள்கிற செயலாகும். இயேசுவின் சோதனைகள் இவற்றைத் தான் நமக்கு தெளிவுபடுத்துகின்றன (லூக்கா 4:1-11). நாளையிலிருந்து அவற்றை சிந்தனைக்கு உட்படுத்துவோம்.