Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 8 முதல் சோதனை

மனிதர்களாக பிறந்த நாமனைவருமே வாழ்க்கையில் சோதிக்கப்படுகிறோம். சோதனைகள் பல கோணங்களில் வரலாம். மனிதர்கள் என்ற முறையிலே சோதனைகள் பிற மனிதர்களிடமிருந்து வரலாம், பிற பொருள்களிலிருந்து வரலாம், பிற நிகழ்வுகளிலிருந்து வரலாம். இயேசுவும் மனிதனாகப் பிறந்தவரானதால் அவரும் சோதிக்கப்படுகிறார். ஆனால், அவர் சாத்தானால் சோதிக்கப்படுகிறார். சாத்தான் மனிதனை எந்த விதங்களில் சோதிக்கும் என்பதற்கு அவருடைய சோதனைகள் ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு முன் அடையாளமாக, ஒரு பாடமாக நமக்கு இருக்கிறது. இயேசுவின் சோதனையை நற்செய்திகளில் சிறப்பாக ஒத்தமைவு நற்செய்திகளில் நாம் காண்கிறோம் (மத் 4:1-11, லூக் 4:1-13, மாற் 1:12-13).

இயேசு அலகையினால் சோதிக்கப்பட்ட முதல் சோதனையை இன்று நாம் சிந்தனைக்கு எடுப்போம். சாத்தான் இயேசுவிடம் வந்து கூறுகிறான். “நீ இறைமகன் என்றால்.” சாத்தான் நம்முடைய திறமையில், வலிமையில் தான் சோதிக்கிறானேத் தவிர நம்முடைய இயலாமையில் அல்ல. இயேசு இறைமகன் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. இயேசுவினுடைய வலிமையும் அதில்தான் இருந்தது. ஆகவே, அவன் நம்முடைய பலத்தை சோதிக்கிறான். எவ்வாறு? நம் பலத்தை நம்புகிறோமோ? அல்லது பலத்துக்கு பின்ணனியாக இருக்கும் இறைவனை நம்புகிறோமோ என்பதே அவனது சோதனை. இன்றைய உலகிலும் நாமும் நம்முடைய திறமைகளிலும், நம்முடைய வலிமைகளிலும் நம்பிக்கை வைத்து “உன்னால் முடியும் தம்பி” என்று சோதிக்கின்ற சாத்தான்கள் பல இருக்கின்றன. நம் பலத்தை நம்புவோம் என்றால் நாம் சோதனைக்கு உட்படுத்துகின்றோம். அந்த பலத்துக்கு பின்னால் இருக்கின்ற இறைவனை நம்ப வேண்டும். அதுதான் இயேசு கற்பிக்கின்ற பாடம் இன்று. இயேசு கூறுகிறார் “மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை என மறைநூலில் எழுதியுள்ளதே” என்று. இயேசு தன்னுடைய பதிலை விவிலியத்தில் தேடுகிறார், இறைவார்த்தையில் தேடுகிறார். அவர் கூறிய இதே பதில் இணைச்சட்டம் 8:3 ல் இருக்கிறது.

ஏன் இயேசு இணைச்சட்ட நூலிலிருந்து இப்பதிலை எடுக்க வேண்டும்? என்ற பின்ணனியைப் பார்ப்போம் என்றால் அற்புதமான பதில் நமக்கு கிடைக்கிறது. “உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களை கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர் தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உள்ள சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்கு பசியைத் தந்தார். ஆனால் மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கிறான் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் மேலுள்ள ஆடை நைந்து போகவில்லை, உங்கள் காலடிகள் வீங்கவுமில்லை” (இச 8:2-4).

ஆகவே, இயேசு தன்னுடைய முன்னோர்களுடைய வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறார். எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் கடவுளை நம்பி வந்தார்கள். கடவுள் அவர்களுக்கு உணவு கொடுத்தார். உடைகள் கிழிந்து போகாதபடி பார்த்துக் கொண்டார். நாற்பது ஆண்டுகளாக நடந்து திரிந்தாலும் கால்கள் வீங்கவில்லை, நோய் வரவில்லை. இந்ந கடவுளை தந்தையாக ஏற்றுக்கொண்ட இயேசு அதே கடவுளை முழுமையாக நம்புகிறார். தன்னுடைய நிலை, தகுதி, திறமை எல்லாம் கடவுள் முன் பயனற்றவைகள். ஆகவேதான் இறைவார்த்தையில் முழுமையாக நம்பிக்கை வைக்கிறார்.

தான் சோதனைக்கு உட்படுத்தப்படும் பொழுது பதிலை அவர் இறைவார்த்தையில் காண்கிறார். தன்னுடைய முன்னோர்களுடைய விசுவாச வாழ்க்கையில் காண்கிறார்.

அன்புக்குரியவர்களே! நாமும் விசுவாசிகள் என்ற முறையிலே சாத்தானால் சோதிக்கப்படுகிறோம். நம்முடைய திறமைகளில் நம்பிக்கை வைக்க சாத்தான் நம்மை சோதிக்கிறான். நம்முடைய நிலைகளில், அதிகாரம், பதவி, பட்டங்களில் நம்பிக்கை வைக்க சோதிக்கிறான். இவைகளை நம்புவோம் என்றால் நாம் சோதனைக்கு அடிமைகளாகி விடுகிறோம் என்பது தான் இன்றைய போதனை. மாறாக, நம்முடைய திறமைகள், வலிமை மற்றனைத்துமே இறைவன் நமக்கு கொடுத்த கொடைகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகளையும், கொடைகளையும் கொடுத்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சித்தங்களையும், திட்டங்களையும் தீட்டி வைத்திருக்கிறார். இவைகளை உணர்ந்து நம்முடைய முன்னோர்களின் விசுவாசத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக அதே கடவுளை ஏற்றுக்கொண்டு இறைவார்த்தையை நம்பி அந்த இறைவார்த்தையில் நம் வாழ்வுக்கான பதில்களை காண்போம் என்றால் நாமும் இயேசுவைப் போல் வாழ்கிறோம் என்று கூற முடியும். இந்த தவக்காலத்தில் இறைவார்த்தையை வாசிப்போம். விவிலியத்தில் நம்முடைய வாழ்க்கையை காண்போம். அந்த விவிலிய விசுவாசத்தை நம் வாழ்வாக்கி கொள்வோம்.