தவக்காலச் சிந்தனைகள் – 9 இரண்டாவது சோதனை
மனிதர்களாக பிறந்த நாமனைவருமே வாழ்க்கையில் சோதிக்கப்படுகிறோம். சோதனைகள் பல கோணங்களில் வரலாம். மனிதர்கள் என்ற முறையிலே சோதனைகள் பிற மனிதர்களிடமிருந்து வரலாம், பிற பொருள்களிலிருந்து வரலாம், பிற நிகழ்வுகளிலிருந்து வரலாம். இயேசுவும் மனிதனாகப் பிறந்தவரானதால் அவரும் சோதிக்கப்படுகிறார். ஆனால், அவர் சாத்தானால் சோதிக்கப்படுகிறார். சாத்தான் மனிதனை எந்த விதங்களில் சோதிக்கும் என்பதற்கு அவருடைய சோதனைகள் ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு முன் அடையாளமாக, ஒரு பாடமாக நமக்கு இருக்கிறது. இயேசுவின் சோதனையை நற்செய்திகளில் சிறப்பாக ஒத்தமைவு நற்செய்திகளில் நாம் காண்கிறோம் (மத் 4:1-11, லூக் 4:1-13, மாற் 1:12-13).
இயேசுவின் இரண்டாவது சோதனை பொருள்களையும், உலக நாட்டங்களையும் முன்வைக்கிறது. தீயோன் (சாத்தான்) உலகனைத்தும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன, நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன் என்ற சுய அதிகாரத்தை வெளிப்படுத்துகிறான். விவிலிய நம்பிக்கை கூறுவது என்னவென்றால் உலகனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது. இறைவன் இந்தப் படைப்புகளோடு தன்னையே ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கிறார். ஆனால் சாத்தான் அது படைப்பனைத்தும் தன் கையில் இருக்கிறது என்று சொல்லி தன்னையே கடவுளாக்குகிறான். அதோடு கூட தன்னை வணங்கினால் இவையனைத்தையும் உம்முடையதாக்குவேன் என்று கூறுகிறான்.
இங்கே சாத்தான் செய்கிற பாவம் தன்னையே கடவுளாக்குதல், தன்னையே உலகனைத்திற்கும் அதிகாரி ஆக்குதல். ஆகவே மனிதனையும் (மனிதனாகிய இயேசுவை) தனது அதிகாரத்திற்குள் உட்படுத்த விரும்புகிறான். இதன்மூலம் தன்னை வழிபட அழைக்கிறான். அதோடு கூட பொருள்களையும் வழிபட அழைக்கிறான். இரண்டாவது சோதனை பொருள்கள் மேல் நம்பிக்கை வைப்பது தான். பொருள்களை நம்பினால் வாழ்வு உண்டு என சோதிக்கப்படுகிறார். ஆனால் இயேசு சொல்கிற மறுமொழி “உன் கடவுளாகிய ஆண்டவரை நம்பி அவர் ஒருவருக்கே பணிசெய்வாயாக என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.
மீண்டும் இயேசு விவிலியத்திலேயே பதிலைத் தேடுகிறார். அவர் கூறுகிற பதிலுடைய பின்னணி இதற்கு சிறந்த விளக்கமாக இருக்கிறது. இணைச்சட்டநூல் 6:10 ல் பார்க்கிறோம்; “மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்கு கொடுப்பதாக ஆணையிட்டு கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை புகச் செய்யும்போதும், நீ கட்டியெழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறை கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலவித் தோப்புகளையும் அவர் உனக்கு கொடுக்கும்போதும், நீ உண்டு நிறைவு கொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்து விடாதபடி கவனமாயிரு. உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட. அவருக்குப் பணிந்து அவர் பெயரால் ஆணையிடு”.
இயேசு மீண்டும் பின்னோக்கிப் பார்க்கிறார் தன்னுடைய முன்னோர்களுக்கு இறைவன் இனாமாக, இலவசமாக கானான் நாட்டை கொடையாக கொடுத்திருக்கிறார். கொடுக்கும் பொழுது நகர்கள், வீடுகள் எல்லாம் தயாராகி இருந்தன. அதுபோல் நிலங்களும் கனி கொடுக்கும் தயார் நிலையில் இருந்தன. அந்தக் கடவுள் இஸ்ராயேல் மக்களின் வழிமரபினரை மறந்து விடமாட்டார். இங்கே சாத்தான் அந்தக் கடவுளை மறந்து தன்னை வழிபட அழைக்கிறான். ஆகவேதான், இயேசு வரலாற்றுப் பின்னணியில் உன் ஆண்டவராகிய கடவுளை வழிபடு என்று கூறுகிறார்.
ஆம் அன்புக்குரியவர்களே! விவிலிய மக்களாகிய நாமும் விவிலிய நம்பிக்கையில் வளர்க்கப்படுகிற நாமும் இயேசுவின் மனநிலையைப் பெற வேண்டும். நம்மிடமுள்ள பொருள்கள், வீடுகள், வசதிகள் அனைத்தும் கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவைகள். இவை நம் முன்னோர்கள் வழிவழியாக நமக்கு கொடுத்த கொடைகள். ஆகவே இறைவன் நம் வரலாற்றில் செயல்படுகிறார் என்பதுதான் நமது நம்பிக்கை. நம் கடவுள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறார். அவரை மறப்பது பொருள்களை வழிபடுவதாகும். அவரை மறப்பது சாத்தானை வழிபடுவதாகும். பொருள்களை வழிபடுவதை தவிர்த்து கடவுளை வழிபடுவோம். இந்த தவக்காலம் இந்த சிந்தனை வழியாக மீண்டும் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லட்டும். முழுமையாக இறைவனை வழிபட்டு வாழ்வோம், இறைமக்களாவோம்.