மனிதர்களாக பிறந்த நாமனைவருமே வாழ்க்கையில் சோதிக்கப்படுகிறோம். சோதனைகள் பல கோணங்களில் வரலாம். மனிதர்கள் என்ற முறையிலே சோதனைகள் பிற மனிதர்களிடமிருந்து வரலாம், பிற பொருள்களிலிருந்து வரலாம், பிற நிகழ்வுகளிலிருந்து வரலாம். இயேசுவும் மனிதனாகப் பிறந்தவரானதால் அவரும் சோதிக்கப்படுகிறார். ஆனால், அவர் சாத்தானால் சோதிக்கப்படுகிறார். சாத்தான் மனிதனை எந்த விதங்களில் சோதிக்கும் என்பதற்கு அவருடைய சோதனைகள் ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு முன் அடையாளமாக, ஒரு பாடமாக நமக்கு இருக்கிறது. இயேசுவின் சோதனையை நற்செய்திகளில் சிறப்பாக ஒத்தமைவு நற்செய்திகளில் நாம் காண்கிறோம் (மத் 4:1-11, லூக் 4:1-13, மாற் 1:12-13).
இந்த மூன்றாவது சோதனையில் தீயோன் (சாத்தான்) இயேசுவை எருசலேம் கோவிலின் உயர்ந்த பகுதியில் நிறுத்துகிறது. மீண்டும் அவரை “நீர் இறைமகன் என்றால்” என்று சவால் விடுகிறது. அவரது பலத்தில், அவரது வலிமையில் மீண்டும் சோதிக்கிறது. அவரை மேலிருந்து கீழே குதிக்கச் சொல்கிறது. அவர் எந்த தீங்கும் எதிர்கொள்ளமாட்டார் என்று விவிலியத்தை மேற்கோள் காட்டியே அவரை சவால் விடுகிறது. “உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மை தாங்கிக் கொள்வார்கள்”(மத் 4:11). இது திருப்பாடல் 91:12 ல் உள்ள வசனமாகும். சாத்தான் கூட வேதம் ஓதுகிறான். வேதம் போதிப்பதைக் கேட்டு பின்பற்றுவது நல்லது ஆனால் அது யாரிடமிருந்து வருகிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இங்கே இயேசு கடவுளை சோதிக்க வேண்டுமென்று விரும்புகிறான் சாத்தான். ஆனால் இயேசு கடவுளை சோதிக்கவில்லை. அவர் சொல்லுகிற பதில் “உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம் என்பதே.” இதுவும் இணைச்சட்டநூல் 6:16 லிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரயேல் மக்கள் கடவுளை சோதித்தார்கள்:
• திருப்பாடல் 106:14 – “பாலைநிலத்தில் அவர்கள் பெரு விருப்புக்கு இடம் கொடுத்தார்கள். பால்வெளியில் அவர்கள் இறைவனை சோதித்தார்கள்.”
• எண்ணிக்கை 11:4-34 – “இஸ்ராயேல் மக்கள் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மடிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது. ஆனால் இப்பொழுதோ நம் வலிமை குன்றி போயிற்று, மன்னாவைத் தவிர வேறு எதுவும் நம் கண்களில் படுவதில்லையே.”
• விடுதலைப் பயணம் 32:1-14 – “இஸ்ராயேல் மக்கள் பொற்கன்று ஒன்று உருவாக்கி, அதை வழிபட்டு கடவுளை சோதித்தார்கள். அப்போது ஆண்டவரே கூறுகிறார்: இம்மக்களை எனக்குத் தெரியும், வணங்கா கழுத்துள்ள மக்கள் அவர்கள்…”
• விடுதலைப் பயணம் 14:11-12 – “எகிப்தில் சாவுக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களை பாலை நிலத்திற்கு சாவதற்கு இழுத்து வந்தீர்?…”
• எண்ணிக்கை 14:22 – “எகிப்திலும் இப்பாலை நிலத்திலும் என் மாட்சியையும், நான் செய்த அருஞ்செயல்களையும் கண்டறிந்தும், இப்பத்து தடவையும் இம்மனிதர்கள் என்னை சோதித்து என் குரலுக்கு செவிகொடுக்காததால்…”
• எண்ணிக்கை 20:5 – “இந்தக் கொடிய இடத்திற்கு அழைத்து வர, எங்களை எகிப்திலிருந்து வெளியேற பண்ணியது ஏன்? தானிய நிலம், அத்திமரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கில்லை, குடிப்பதற்கு தண்ணீரும் இல்லையே.”
இதுபோன்று இன்னும் பல சோதனைகளால் இஸ்ராயேல் மக்கள் தங்கள் உணவுக்காகவும், நீருக்காகவும், நிலபுலங்களுக்காகவும் கடவுளை சோதித்தார்கள். இதுபோன்ற சோதனைகளை நாமும் பல வேளைகளில் செய்கிறோம். இஸ்ராயேல் மக்களைப் போல நாமும் கடவுளுக்கு கீழ்படிந்து கோவிலுக்கு வருகிறோம், செப வழிபாடுகளில் ஈடுபடுகிறோம். ஆனால், நம்முடைய வேண்டல்கள் எல்லாம்
· உணவுக்காகவும்
· நிலபுலங்களுக்காகவும்
· சொத்து, சுகங்களுக்காகவும்
· வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும்
· படிப்பில் வெற்றி அல்லது தொழில் முன்னேற்றத்திற்காகவும்
போன்ற தேவைகளுக்காகவே செபிக்கிறோம். இறைத் திட்டத்தை மறந்து விடுகிறோம்.
அன்புக்குரியவர்களே! இந்த தவக்காலத்தில் நம்முடைய தேவைகள், விருப்புகள், ஆசைகளைக் கொண்டு இறைவனை சோதிக்காது, இயேசு கெத்சமெனித் தோட்டத்தில் செபித்தது போல “என் விருப்பமல்ல உம்முடைய சித்தம் நிறைவேறட்டும்” என்று செபிப்போம்.