வாழ்க்கை ஒரு தொடர் பயணம் என்பது ஒரு எதார்த்தம். எல்லா கலாச்சாரங்களிலும் வாழ்க்கைப் பயணத்தை வாழ்ந்து காட்டுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த எதார்த்தம் விவிலிய மக்களிடமும் காணப்படுகிறது. இஸ்ராயேல் மக்கள் தங்கள் வாழ்க்கை துவக்கத்தை ஒரு பயணமாகவே கருதினார்கள். இதுவே அவர்களுடைய நம்பிக்கை கூற்றாகவும் இருந்தது. தங்கள் முன்னோர்களை நிரந்தர பயணிகளாகவே அவர்கள் கருதினார்கள். “நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டிற்கு இறங்கிச் சென்றார்” (இச 26:5) என்று தங்கள் முன்னோரைப் பற்றிய அறிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். விவிலியம் முழுவதிலும் இஸ்ராயேல் மக்கள் பயணிப்பதை நாம் காண்கிறோம். எகிப்து நாட்டிற்கு பயணிக்கிறார்கள், விடுதலைப் பெற்றவர்களாக தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்தில் பயணிக்கிறார்கள், கானான் நாட்டில் குடியேறிய பிறகு கூட அசீரியாவுக்கு அடிமைகளாக பயணிக்கிறார்கள், அதன்பிறகு மீண்டும் பாபிலோனியாவுக்கு பயணிக்கிறார்கள். இவ்வாறு வாழ்க்கையே ஒரு தொடர் பயணமாக அவர்களுக்கு இருந்தது.
ஆனால் இந்தப் பயணத்தில் கடவுளும் அவர்களோடு உடன் பயணிக்கிறார் என்ற உண்மையை உணருகின்றார்கள். இதைத் தான் விடுதலைப் பயணம் 13:22 ல் “பகலில் மேகத்தூணும், இரவில் நெருப்புத் தூணும் மக்களை விட்டு அகலவில்லை” என வாசிக்கிறோம். அவர்களோடு உடன் பயணிக்கின்ற கடவுள் அவர்களை ஒரு திருப்பயணத்திற்கும் அழைக்கிறார். இதைத் தான் விடுதலைப் பயணம் 34:23 ல் “உங்களுள் ஒவ்வொரு ஆண்மகனும் ஆண்டில் மூன்று தடவை தலைவரும் இஸ்ராயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் திருமுன் வர வேண்டும்” என ஆண்டவர் கூறுவதைப் பார்க்கிறோம். இணைச் சட்டம் 16:16 ல் “ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வர வேண்டும். புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வர வேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறும் கையராய் வர வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசீர் வழங்கியதுற்கேற்ப ஒவ்வொருவனும் தன்னால் ஆனதை கொண்டு வருவானாக” என்று ஆண்டவர் கட்டளையிடுகிறார். ஆக, திருப்பயணங்கள் கடவுளை நோக்கியதாக இருக்க வேண்டும், கடவுளை சந்திக்கின்ற ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் கடவுளுக்கு நம்மிடமிருந்து ஏதாவது கொடுப்பதாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு இஸ்ராயேல் வழிமரபினரும் செய்து வந்தார்கள். இயேசுவும் அவ்வாறே பயணித்திருக்கிறார்.
யோவான் நற்செய்தியின்படி பார்க்கும்பொழுது இயேசு தன் வாழ்நாளில் பலமுறை எருசலேமுக்குச் சென்றிருக்கிறார். அதேபோல லூக்கா நற்செய்தியிலும் அவர் சிறுவனாய் இருந்த போதும் கூட அவருடைய பெற்றோர்கள் அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் மாற்கு நற்செய்தியில் இயேசு தன் சீடர்களோடு ஒரே முறைதான் எருசலேமை நோக்கி பயணிக்கிறார். பயணத்தின் போது மூன்று முறை தனக்கு நிகழப் போவதை முன்வைக்கிறார்.
· மாற்கு 8:31 – “மானிடமகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமக்குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டு கொலை செய்யப்படவும், மூன்று நாள்களுக்குப் பின் உயிர்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்கு கற்பித்தார். அதன்பின் “என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்று கூறுகிறார்.
· மாற்கு 9:30-37 – மீண்டும் இயேசு எருசலேமுக்குச் செல்வதைப் பற்றியும், தன் வாழ்வின் முடிவைப் பற்றிய நிகழ்வுகளைப் பற்றியும் கூறிவிட்டு “என் பெயரால் இத்தகைய சிறுபிள்ளைகள் ஒருவரை ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார்” என்று தன்னை பின்பற்றுபவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
· மாற்கு 10:32-34 – மீண்டும் எருசலேம் நிகழ்வுகளைப் பற்றி அவர்களுக்கு கூறிவிட்டு “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தன் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
இவ்வாறாக, மூன்று முறை தன்னுடைய சாவை முன்னறிவித்த இயேசு அது ஒரு எருசலேமை நோக்கியப் பயணமாக கூறுகிறார். அதில் தன்னுடைய வாழ்க்கையை ஒரு கொடையாக கொடுப்பதாக கூறுகிறார். மேலும் தன்னை பின்பற்றுகிற சீடர்களை அதே சிலுவைப் பயணத்திற்கு அழைக்கிறார். இந்த சிலுவைப் பயணத்தில் அவர்கள் தங்களுடைய உயிரை இழக்கவும் துணிய வேண்டும், பிறருக்காக தங்களை அர்ப்பணிக்க முன்வர வேண்டும், பிறரில் இறைவனை காண வேண்டும் என்று கூறுகிறார்.
ஆகவே, அன்புக்குரியவர்களே! நாம் இந்த தவக்காலத்தில் சிலுவைப் பாதை பக்தி முயற்சியில் ஈடுபடுகிறோம். இயேசு நடந்துச் சென்ற அதே பயணத்தை தியானித்து செபிக்கிறோம். ஆனால், இயேசு நம்மை ஒரு சிலுவைப் பயணத்திற்கு அழைக்கிறார். இந்த சிலுவைப் பயணம் ஒருமுறை தான் இருக்கும். அது எருசலேமை நோக்கியப் பயணமாக இருக்க வேண்டும். அந்தப் பயணத்தில் சிலுவையை சுமந்து செல்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அந்தப் பயணத்தில் ஒவ்வொருவரும் தன்னை இழக்க முன் வர வேண்டும். பிறரை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், தொண்டாற்ற வேண்டும். இவ்வாறான பயணம் தான் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லுகின்ற பயணம். இதுதான் இயேசு விரும்பும் சிலுவைப் பயணம்.