மன்னிப்பு கொடுத்தலும், மன்னிப்பு பெறுதலும் கிறிஸ்தவ வாழ்வின் மூலைக்கல். கிறிஸ்தவம் என்றாலே மன்னிப்பு என்று பொருள் கொள்ளலாம். இதே பண்பை பழைய ஏற்பாடும் முன்வைக்கிறது. பழைய ஏற்பாட்டின் கடவுள் இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். மீட்டெடுத்தவர்களை நாற்பது ஆண்டுகளாக பாலைநிலத்தில் பயிற்சி கொடுக்கிறார். அந்தப் பயிற்சியின் காலத்தில் இறைவன் மன்னிப்பு வழங்குபவர் என்பதை உணரும்படியாக அவர்களை பலமுறை மன்னித்து வழிநடத்துகிறார். அவர்கள் சிலைவழிபாட்டுக்கு தங்களையே அடிமைப்படுத்தியபோதும் கூட அவர்களை மன்னித்து மீட்டெடுக்கிறார். விடுதலைப் பயணம் 32, 33 அதிகாரங்களிலே இஸ்ராயேல் மக்கள் வணங்கா கழுத்துள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் பெரும் பாவம் செய்பவர்களாக காணப்பட்டாலும் மோசே அவர்களுக்காக இறைஞ்சி மன்றாடியபொழுது அவர்களை மன்னித்து விடுகிறார் என்றும், அப்பொழுதுதான் ஆண்டவருக்கான பெயரின் விளக்கம் கொடுக்கப்படுகிறது என்றும் காண்கிறோம். “ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன், சினங்கொள்ள தயங்குபவர், பேரன்புமிக்கவர், நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர், கொடுமையையும், குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்” (விப 34:6-7).
இஸ்ராயேல் மக்கள் பாவங்கள் செய்யும்பொழுது பல வேளைகளில் அவர்களைத் தண்டிப்பவராக கடவுள் காணப்படுகிறார். நாடே செய்த குற்றத்திற்காக அவர்களை அசீரியாவுக்கு அடிமைகளாக அனுப்புகிறார். அதே போல பாபிலோனுக்கும் அவர்களை அடிமைகளாக அனுப்புகிறார். மீண்டும் அவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு வளமை வாழ்வை, நிறைவாழ்வை முன்வைக்கிறார். இதை இறைவாக்கினர்கள் நமக்கு முன்வைக்கிறார்கள். எசாயா 43:18-19 ல் வாசிக்கிறோம்: “முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள், முற்கால நிகழ்ச்சிகளைப் பற்றி சிந்திக்காதீர்கள், இதோ புதுச் செயல் ஒன்றை நான் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றி விட்டது, நீ அதை கூர்ந்து கவனிக்கவில்லையா?” இவ்வாறாக, பாவ வாழ்விலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு புதுவாழ்வு அளிப்பதாக இறைவாக்கினர் பலர் வழியாக ஆண்டவர் பேசுகிறார்.
புதிய ஏற்பாட்டில் இயேசுவே அந்த மன்னிப்பின் முன்அடையாளமாக தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறார். தவற்றை மன்னிக்கும் வரை ஓயாத ஒரு தந்தையாகவும், பரிவுடனும், இரக்கத்துடனும் ஒதுக்கப்பட்டதை வெற்றி கொள்பவராகவும் இருக்கிறார் இறைவன் (லூக் 15:1-32). இவ்வுமைகளில் கடவுள் மன்னிக்கும்பொழுது குறிப்பாக மகிழ்ச்சி நிறைந்தவராக அறிமுகப்படுத்தப்படுகின்றார். அதேபோல மத்தேயு நற்செய்தி 18: 21-35 ல் மன்னிக்க மறுத்த பணியாளனை சிந்திக்க வைக்கிறார். நான் உன்னை மன்னித்ததுபோல நீயும் உன் உடன் பணியாளனை மன்னிக்க வேண்டும் அல்லவா! என்றார். மேலும் உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் மன்னிக்கமாட்டார் என்றார். இயேசு கற்பித்து கொடுத்த அந்த மன்றாட்டிலும் நாங்கள் பிற குற்றங்களை மன்னிப்பது போல எங்கள் குற்றங்களையும் மன்னித்தருளும் என்று மன்னிப்பை முன்வைக்கிறார். இந்த செபத்தில் நாமே கடவுளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க அழைக்கப்படுகிறோம். நாம் மன்னிப்பதை வைத்துதான் இறைவன் நம்மை மன்னிக்கிறார்.
மேலும் “பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்காதீர்கள், அப்போது தான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களை கண்டனம் செய்யாதீர்கள், அப்போது தான் நீங்களும் கண்டனத்திற்கு ஆளாகமாட்டீர்கள். மன்னியுங்கள், மன்னிப்பு பெறுவீர்கள். கொடுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கி, குலுக்கி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்”(லூக் 6:37-38) என்கிறார். இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்டிய பவுலடிகளாரும் மன்னிப்பை முன்வைக்கிறார். எனவே, “பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தனியட்டும்” (எபே 4:24). ஏனென்றால் சில தருணங்களில் மன்னிப்பது மிகக் கடினமான ஒன்றாகத் தோன்றலாம். இருப்பினும் மன்னிப்பு தான் மன அமைதியை பெற வலுவற்ற நம் கரங்களில் வழங்கப்பட்ட ஒரு கருவி. கோபம், உளக்கொதிப்பு, வன்முறை, பழிவாங்குதல் போன்றவற்றை கைவிடுவது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு இன்றியமையாத காரணிகள்.
அன்புக்குரியவர்களே! இந்த தவக்காலத்தில் மன்னிப்பு, ஒப்புரவு போன்றவைகளைப் பற்றி தியானிப்போம், சிந்திப்போம். இது சிந்தனை அளவில் மட்டும் இருந்துவிடக் கூடாது மாறாக எல்லாரையும் மனதார மன்னிப்போம். மன்னிப்பதற்கு கடினமாக இருப்பின் அவர்களுக்காக செபிப்போம். இறைவன் அவர்களுக்கு மன்னிப்பை வழங்க வேண்டும், ஆசீரை வழங்க வேண்டும் என் செபிப்போம். அதோடுகூட பாஸ்கா விழாவிற்கு முன்பாக ஒப்புரவு அருள்சாதனத்தின் வழியாக இறை மன்னிப்பை பெறுவோம்.