Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 15 எருசலேம் நோக்கியப் பயணம் இரண்டாம் அறிவிப்பு

நற்செய்திகள் நான்கும் இயேசுவை எருசலேம் நோக்கியப் பயணியாகவே சித்தரிக்கிறது. எருசலேம் தான் அவருடைய குறிக்கோளாகவும், அவருடைய உலக வாழ்க்கைப் பயணத்தின் கடை எல்லையாகவும் இருக்கிறது. இதில் யோவான் நற்செய்தியாளர் இயேசுவை பலமுறை எருசலேமில் போதிப்பவராகவும், பணி செய்பவராகவும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பாஸ்காவிற்கும் அவர் எருசலேமுக்குச் செல்வதாக குறிப்பிடுகிறார் யோவான் நற்செய்தியாளர். லூக்கா நற்செய்தியாளரும் இயேசுவை ஒரு சில முறைகள் எருசலேமில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். அவர் குழந்தையாக இருந்தபொழுது எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்டதை, இளம் வயதில் காணாமல் போன இயேசுவை எருசலேம் கோவிலில் கண்டுபிடித்ததைப் பற்றி லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு நற்செய்தியாளர் எருசலேமுக்கு இயேசு நேரடியாக செல்லவில்லை என்பதை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் எருசலேம் அருகிலுள்ள பெத்லகேமில் பிறந்ததனால் அங்கே சென்றிருக்கலாம் என யூகிக்கிறார். ஆனால் மாற்கு நற்செய்தியாளர் இயேசுவை ஒரே முறை தான் எருசலேமுக்குப் போகவைக்கிறார். அதுவும் தனது கலிலேயப் பணியை முடித்தப் பிறகு அவரது பயணம் எருசலேமை நோக்கித் தான் இருக்கிறது என்பதை மாற்கு குறிப்பிடுகிறார். இந்தப் பயணத்தைப் பற்றி மாற்கு நற்செய்தியிலே இயேசு மூன்று முறை முன்னறிவிக்கின்றார். ஒவ்வொரு அறிவிப்பின் போதும் சீடத்துவத்திற்கான முக்கியமான பண்புகளைப் பற்றியும் பேசுகின்றார்.

இரண்டாவது முறையாக எருசலேமில் நிகழவிருப்பதை இயேசு முன்னறிவிக்கிறார். “மானிடமகன் மக்கள் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார், அவர்கள் அவரை கொலை செய்வார்கள், கொல்லப்பட்ட மூன்றாம் நாளுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” (மாற்கு 9:31). இதே முன்னறிவிப்பை மத்தேயு 17:22-23, லூக்கா 9:44-45 ல் காண்கிறோம். எருசலேமில் நிகழப்போவதை முன்னறிந்திருந்தாலும் இயேசு தொடர்ந்து எருசலேமை நோக்கிப் பயணிக்கிறார். சீடர்களும் அதை அறிய வேண்டும், புரிய வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னறிவிக்கிறார். ஆனால், அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள் (மாற்கு 9:32). ஆனால் அவருடைய சீடர்கள் தங்களிடையே வாதாடிக் கொண்டு வந்தார்கள். வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடி வந்தீர்கள் என இயேசு வினவும் பொழுது தங்களுள் பெரியவர் யார்? என்பதைப் பற்றி வழியில் வாதாடிக் கொண்டு வந்ததாக ஒப்புக்கொள்கிறார்கள்.

முதல் முன்னறிவிப்பில் பார்த்தோம் அவர்கள் உலகத்தைப் பற்றி, உலக பொருள்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்ததை. இங்கே இரண்டாம் முன்னறிவிப்பில் தங்களுள் யார் பெரியவர் என்று வாதாடுகிறார்கள். இயேசுவின் நெருங்கிய சீடர்களே, அவரோடு தொடர்ந்து உடன் பயணித்தவர்களே, இயேசுவின் குறிக்கோள்களை, இறையாட்சி விழுமியங்களை முன்வைக்கவில்லை. மாறாக, இவ்வுலகம், இவ்வுலகத்திலுள்ள பதவிகள், பட்டம் போன்றவைகளைத் தான் சிந்தித்துக் கொண்டு எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அப்படி இருந்தும் இயேசு மனம் தளரவில்லை. மாறாக, அவர்களுக்கு மீண்டும் இறையாட்சி விழுமியங்களைப் போதிக்கிறார். அவர் கூறுகிறார்: “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவருக்கும் கடைசியாக, அனைவருக்கும் தொண்டராக இருக்கட்டும் என்றார்” (மாற்கு 9:35). எருசலேம் நோக்கியப் பயணத்தில் எருசலேம் சிலுவை மரணத்தை முன்வைக்கிற சீடத்துவத்தில் பதவிகளும், பட்டங்களும் முக்கியமல்ல, மாறாக, பணிகளும், எளிமையும், கடைநிலைகளுமே முக்கியம் என்ற இறையாட்சி மதிப்பீடை இயேசு போதிக்கிறார்.

மூன்று நற்செய்திகளிலும் இயேசு ஒரு சிறுபிள்ளைளை முன்வைக்கிறார். அந்த சிறுபிள்ளைக்குப் பணி செய்வது தனக்கே பணி செய்வது என்பது போன்ற கருத்தை முன்வைக்கிறார். “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்” (மாற்கு 9:37, மத்தேயு 18:5, லூக்கா 9:48). சிறுபிள்ளைகளுக்குச் செய்கின்றப் பணியை ஒரு இறைபணியாக இயேசு கூறுகிறார். சிறுபிள்ளைகள் கல்லம் கபடற்றவர்கள். சிறுபிள்ளைகள் தங்களால் எதையும் செய்ய முடியாது, பிறர் உதவியை நாடி நிற்பவர்கள். சிறுபிள்ளைகள் இயலாதவர்கள், அறியாதவர்கள். இவர்களுக்குச் செய்கின்றப் பணியே எருசலேம் நோக்கிச் செல்கின்ற பயணத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகள்.

அன்புக்குரியவர்களே! இயேசுவினுடைய போதனை இதுவே: அறியாத சிறுவர்களுக்கு அறிவூட்டுவது, வலிமையற்ற சிறுவர்களுக்கு வலுவூட்டுவது, இயலாதவர்களுக்கு துணை நிற்பது, கல்லம் கபடற்றவர்களுக்கு உண்மையை போதிப்பது. இவையே இறையாட்சியை நோக்கியப் பயணத்தின் பணிகள். இவைகளை மறந்து பதவிகளையும், பட்டங்களையும் நாடுகிறவர்கள் இயேசுவின் சீடத்துவத்திற்கு தகுதியற்றவர்கள். இதையே இயேசு தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார். அவர் காட்டிய வழியில் நாமும் பயணிப்போம்@ நம்முடைய எருசலேமைச் சென்றடைவோம்.