Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 20 இயேசுவின் உயிர்ப்பு

“கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே”(1கொரி 15:17) என்று பவுலடிகளார் கூறுகிறார். இயேசு சிலுவையில் மரித்தார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. மரித்தவரை கல்லறையில் அடக்கம் செய்தார்கள் என்பதும் வரலாற்று நிகழ்வே. ஆனால், அதன்பிறகு நடந்தவைகள,; அதாவது அவருடைய உயிர்ப்பு, அவருடைய சீடர்களின் அனுபவமே.
இயேசு வெள்ளிக்கிழமை மாலை கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருடைய உடல் அங்கே இல்லை. “ஆண்டவரை கல்லறையில் இருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர் அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை”(யோவான் 20:2). இறந்த இயேசுவை, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவை காணவில்லை என்பதுதான் வரலாற்று நிகழ்வு. அதேபோல் கல்லறையும் வெறுமையாக இருந்தது. இதுவும் வரலாற்று நிகழ்வு. எல்லா நற்செய்தியாளர்களும் கல்லறை வெறுமையாகத்தான் இருந்தது என்பதை முன்வைக்கிறார்கள். மாற்கு நற்செய்தியில் 16:8 ல் கல்லறைக்குச் சென்ற பெண்கள் அஞ்சி, பயந்து ஓடினார்கள் எனக் கூறப்படுகிறது. இதைத்தான் உயிர்ப்பு நிகழ்வின் கரு என்று விவிலிய விளக்க உரையாளர்கள் கூறுவார்கள். கல்லறை வெறுமையாக இருந்தது, வெறுமையை கண்ட சீடர்களின் முதல் எதிர்வினை அச்சம், இடத்தை விட்டு ஓடுதல். ஆகவே, கல்லறை வெறுமையாக இருந்தது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. கல்லறை வெறுமையாக இருந்திருந்தால் அங்கு அடக்கம் செய்யப்பட்ட உடல் என்னவாயிற்று என்பதுதான் கேள்வி. நம்பிக்கையற்ற மக்கள் பல தவறான பதில்களை கூறலாம். ஆனால், நம்பிக்கையின் மக்களாகிய நமக்கு தரப்படுகிற பாடம் இறந்தவர் உயிர்த்துவிட்டார்.
இயேசுவின் உடலை யாராவது தூக்கிச் சென்றிருந்தாலும் கூட, அவர்கள் அவரை அவரது உடலைச் சுற்றியிருந்த துணிகளோடு தான் தூக்கிச் சென்றிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் இறந்து மூன்றாவது நாளாகிவிட்டது. இறந்த உடல் அழுகி, நீர் சொட்டிக் கொண்டிருக்கும். துணிகளை மட்டும் விட்டுவிட்டு உடலை எடுத்துச் செல்வது கடினம். இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை யோவான் 20:6-7 ல் சொல்லாமல் சொல்லுகிறார். “அங்கு துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு அல்லாமல் ஒரு இடத்தில் தனியாக வைக்கப்பட்டிருந்தது.” யோவான் நற்செய்தியாளர் சொல்ல வருவது என்னவென்றால் உயிர்த்தவர் (அல்லது வானதூதர்) துணிகளை சரிசெய்து ஒருபுறம் வைத்துவிட்டு, தலைப்பாகையை மறுபுறம் வைத்துவிட்டு கல்லறையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். இந்த நிகழ்வை மத்தேயு நற்செய்தியிலும், யோவான் நற்செய்தியிலும் வானதூதர்கள் வெளிப்படுத்துகிறார்கள். வானதூதர்கள் வழியாக உயிர்ப்பு வெளிப்படுத்தப்படுகிறது. எவ்வாறு இயேசுவின் பிறப்பு வானதூதர்கள் வழியாக மரியாவுக்கு வெளிப்படுத்தப்பட்டதோ, அவ்வாறே வானதூதர்கள் இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி சீடர்களுக்கு வெளிப்படுத்தினார்கள். இயேசுவின் பிறப்பும் உயிர்ப்பும் இறைவனின் செயல், இறைவனின் வெளிப்பாடு. ஆகவே, உயிர்ப்பு என்பது ஒரு வெளிப்பாடு. அது நம்பிக்கையின் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான வரலாற்று நிகழ்வு கல்லறை வெறுமையாக இருந்தது.
வெறுமையான கல்லறையே இயேசுவின் உயிர்ப்புக்கு முதல் ஆதாரம், அடையாளம். அவருடைய உயிர்ப்புக்கான இரண்டாவது ஆதாரம் சீடர்களிடையே இருந்த மனநிலை மாற்றம். இயேசு இறந்தவுடன் சீடர்கள் பயந்து, அஞ்சி ஓடி ஒளிந்தார்கள். யாரையும் அவர்கள் சந்திக்க விரும்பவில்லை. என்ன செய்வதென்று தெரியாது பதற்றத்தில் தனித்திருந்தார்கள். ஆனால் நற்செய்திகள் கூறுவதுபோல உயிர்த்த இயேசுவின் அனுபவம் பெற்ற பிறகு அவர்கள் பதுங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறி மக்களை சந்திக்கிறார்கள், மக்களிடம் போதிக்கிறார்கள், அதிகாரிகளிடமும், அரசியல் மதத் தலைவர்களையும் எதிர்கொண்டு சந்தித்து இயேசு உயிர்த்து விட்டார் என்று போதிக்கிறார்கள். உதாரணமாக, லூக்கா நற்செய்தி 24ம் அதிகாரத்தில் எம்மாவுஸ் என்ற ஊருக்கு இரண்டு சீடர்கள் நடந்து சென்றிருக்கிறார்கள். ஒருவர் மற்றவரிடம் தங்களுடைய வாழ்வின் தோல்விகளையும், துக்கங்களையும் வெளிப்படுத்திக் கொண்டு முக வாட்டத்தோடு சென்றார்கள். இயேசு அவர்களை சந்திக்கிறார், அவர்களோடு உடன் பயணிக்கிறார், அவர்கள் வீட்டில் இரவு உணவின் போது சீடர்கள் உயிர்த்த இயேசு அனுபவம் பெறுகிறார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேம் சென்று இயேசு உயிர்த்துவிட்டார் என்று அறிக்கையிடுகிறார்கள். அதேபோல் யோவான் நற்செய்தியிலும் இயேசு சீடர்களுக்குத் தோன்றுகிறார். இதையே பவுலடிகளார் இரத்தின சுருக்கமாக கூறுகிறார்: “உயிர்த்த இயேசு கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர். சிலர் இறந்து விட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பி பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்” (1கொரி 15:5-8). ஆக, உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றி தன் உயிர்ப்பு அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்து அவர்களைத் திடப்படுத்தினார், உறுதிப்படுத்தினார், பயங்களை நீக்கினார், இறையாட்சிப் பணிக்கு அவர்களை பணித்தார். சீடர்களும் வெளிப்படையாக அதை அறிவித்தார்கள்.
இயேசுவின் உயிர்ப்பைப் பற்றிய மூன்றாவது ஆதாரமாக நாம்; பார்ப்பது சீடர்களுடைய எண்ணிக்கையில் வளர்ச்சியும் அதிகரிப்பும். திருத்தூதர் பணி 2:41 ல் “அவருடைய வார்த்தையை கேட்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்ந்தனர்.” மேலும் மறுவாரம் அவருடைய போதனையைக் கேட்டு அவர்களோடு சேர்ந்த சீடர்களுடைய எண்ணிக்கை ஐயாயிரம் ஆயிற்று (திப 4:4). இதைத்தான் திருத்தூதர் பணி ஆசிரியர் கூறுகிறார்: “ஆண்டவரும் தான் மீட்டுக்கொண்டவர்களை நாள்தோறும் அவரோடு சேர்;த்துக் கொண்டேயிருந்தார்”(திப 2:47).
இந்த மூன்று ஆதாரங்களும்
· கல்லறை வெறுமையாக இருத்தல்
· திருத்தூதர்களின் மனநிலை மாற்றம்
· சீடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இறந்த இயேசுவுக்கு ஏதோ நடந்திருந்தது, அது முன்கூறிய ஆதாரங்களுக்கு விளக்கங்களாக அமைந்திருந்ததை சுட்டிக்காட்டுகிறது. அந்த நிகழ்வைத் தான் இயேசு உயிர்த்தார் எனக் கூறுகின்றோம். இறந்த இயேசு உயிர்த்தார் என்பது ஒரு அனுபவ நிகழ்வு. இந்த நிகழ்வைத் தான் நம் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா பெருவிழாவின் போது கொண்டாடுகிறோம்.