பழைய ஏற்பாட்டில் பல அடையாள செயல்களைப் பார்க்கிறோம். இறைவாக்கினர்கள் கூட பல அடையாளச் செயல்களை செய்து இறை செய்தியை மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள். உதாரணமாக எசாயா இறைவாக்கினர் அடிமைத்தனத்தை வெளிப்படுத்த மூன்று ஆண்டுகள் ஆடை இன்றியும், வெறும் காலோடும் எருசலேம் நகரில் அலைந்து திரிந்தார் (எசா 20). அதேபோல் ஏரேமியா இறைவாக்கினர் கழுத்தில் நுகத்தடி மாட்டிக்கொண்டு அடிமைத்தனத்தின் அடையாளமாக எருசலேம் நகரில் வாழந்தார் (ஏரே 27:2).
சாக்கு உடை உடுத்துதலும், சாம்பல் பூசுதலும் மேற்கூறியது போல ஒரு அடையாளச் செயலே. சாக்கு உடை உடைத்துதலும், சாம்பல பூசுதலும் பின் கூறப்படுபவைகளுக்கு அடையாளங்களாக இருந்தன.
· அது ஒரு அவமானத்தின் அடையாளம்
· அது ஒரு துக்கத்தின் அடையாளம்
· அது ஒரு அவலநிலையின் அடையாளம்
· அது ஒரு மனம் திரும்புதலின் அடையாளம்
மனம் திரும்புதலை வெளிப்படுத்த விரும்புவோர் சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து தங்கள் தலைகளில் சாம்பலை தூவி கொள்வார்களாம். இதைத் தான் இயேசு மத்தேயு நற்செய்தி 11:21 ல் சொல்கிறார்:“உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர் மற்றும் சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பார்கள்.”
பழைய ஏற்பாட்டின் பின்ணனியை சிறிது ஆழமாக படிப்போமென்றால் இந்த பழக்கத்தின் கருத்து நமக்கு தெளிவுபடுகிறது.
தன் மகன் இறந்து விட்டான் என்ற துக்கத்தை வெளிப்படுத்த யாக்கோபு சாக்கு உடை அணிகிறார் (தொநூ37:34).
இறந்தவர்க்கு இதயம் நிறைந்த துக்கத்தை வெளிப்படுத்த சாக்கு உடை அணிய கட்டளையிடுகிறான் தாவீது அரசன் (2சாமு 3:31).
நாட்டிலே பேரிடர் நடந்துவிட்டதை வெளிப்படுத்த சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசி கொண்டான் மொர்தெக்காய் (எஸ்தர் 4:1).
நாடு முழுவதும் சாக்கு உடை அணிந்தது (எஸ்தர் 4:3).
கடவுள் முன் தாழ்ந்து பணிந்து மனம் திரும்புதலை சாக்கு உடை அணிவித்தல் வெளிப்படுத்தியது (யோனா 3:5-7).
விலங்குகளுக்கு கூட சாக்கு உடை அணிவிக்கப்பட்டன (யோனா 3:8).
அரசர்கள் கூட சாக்கு உடை அணிந்தார்கள்
· எசேக்கியா அரசன் (எசாயா 37:1)
· எலியாக்கிம் (2அரசர் 19:2).
· ஆகாபு (1அரசர் 21:27).
· எருசலேம் நகரத்து பெரியோர் (புலம்பல் 2:10).
· கடவுள் மனிதனை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு அடையாளம் சாக்கு உடைகளை களைதல் (திப 30:11).
ஆக, சாக்கு உடை அணிதல், சாம்பல் பூசுதல் ஒரு வெளி அடையாளமே. ஆனால், அது அணிவோரின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. தவக்காலம் நம்மை ஒரு மனநிலை மாற்றத்திற்கு அழைக்கிறது. சாக்கு உடையோ அல்லது காவி உடையோ அணிதல் முக்கியமல்ல, சாம்பல் பூசுதலோஅல்லது செபமாலை அணிவதோ முக்கியமல்ல. மனம் திரும்புதல் அவசியம். உலக பற்றுகளிலிருந்து மனம் திரும்ப வேண்டும், ஆடை அலங்காரங்களிலிருந்து மனம் திரும்ப வேண்டும், பொருளாசைகளிலிருந்து மனம் திரும்ப வேண்டும், பணம் பிடிப்புகளிலிருந்து மனம் திரும்ப வேண்டும். இதுவே, இன்று சாம்பல் பூசுதலுக்கான அடையாளங்கள்.