தவக்காலத்தின் குறிக்கோளாக அல்லது தவக்காலத்தின் நிறைவாக நமக்கு கொடுக்கப்படுவது இறை அனுபவமே. உயிர்த்த இயேசுவை அனுபவிக்க வேண்டும், அதுவும் உயிர்த்த இயேசுவில் இறைவனை அனுபவிக்க வேண்டும். இன்னும் சிறப்பாக அந்த இறைவனை இரக்கமாக அனுபவிக்க வேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பம். இறைவனை இரக்கமாக அனுபவிக்கிறவன் அந்த இரக்கத்தை உலகில் வெளிப்படுத்த வேண்டும். “இறைத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்”(லூக் 6:36) என்று அறைக்கூவல் விடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விவிலியமும் இறைவனை இரக்கமுள்ளவர் என்றே சித்தரிக்கிறது. “இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன், சினம் கொள்ளத் தயங்குபவர், பேரன்புமிக்கவர், நம்பிக்கைக்குரியவர்”(விப 34:6). இந்த இறை இரக்கத்தை தியானிக்க அழைக்கும் நம் திருத்தந்தை அதற்கு விளக்கமும் கொடுக்கிறார்.
· இரக்கம் : இவ்வார்த்தை போற்றுதலுக்குரிய தூய மூவொரு கடவுளின் மறைபொருளை வெளிப்படுத்துகின்றது.
· இரக்கம் : இது கடவுள் நம்மை சந்திக்க வரும் ஒரு நிறைவான ஒப்பற்ற நிகழ்வு.
· இரக்கம் : இது தங்களின் வாழ்க்கைப் பாதையில் யாரெல்லாம் நேர்மையோடு தங்கள் சகோதர சகோதரிகளின் கண்களை உற்றுநோக்குகிறார்களோ அவர்கள் ஒவ்வொருவரின் மானுட இதயத்திலும் உறைந்து வாழும் அடிப்படைச் சட்டம்.
· இரக்கம் : இது நாம் பாவமுடைமையில் இருந்தாலும் எக்காலமும் நாம் அன்பு செய்கிறோம் என்ற நம்பிக்கையை நம் உள்ளங்களுக்கு வழங்கி, கடவுளையும் மனிதனையும் இணைக்கும் பாலமாக உள்ளது.
திருப்பாடல் 136 இறைவனின் பேரன்பை, இரக்கத்தை வெளிப்படுத்துகிற பாடலாக இருக்கிறது. இறைவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்த அந்த புனித நிகழ்வை வெளிப்படுத்துகின்ற பாடல் இது. இரவு உணவு முடிந்த பிறகு இயேசுவும் இந்த திருப்பாடலை முழுமையாக பாடிவிட்டு (மத் 26:30) கெத்சமெனிக்குச் சென்றதாக விவிலிய விளக்க ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இயேசுவும் தன் பொதுப் பணிக்காலத்தில் தன்னுடைய போதனைகள் வழியாகவும் (காண் லூக் 15:1-32, மத் 18:21-35), அரும் அடையாளச் செயல்கள் வழியாகவும் (காண் மத் 9:36, 14:14, 15:34, லூக் 7:15) இறைவன் இரக்கம் நிறைந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறார். இரக்கம் என்பது தந்தையின் செயல் மட்டுமன்று, அவருடைய உண்மை பிள்ளைகள் யார் என்பதை உறுதிபடுத்தும் அளவுகோலாகவும் அது உள்ளது என இயேசு உறுதிப்படுத்துகின்றார். சுருங்கக்கூறின் நாம் இரக்கத்தை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். காரணம் நமக்கு இரக்கம் காட்டப்பட்டுள்ளது. இரக்கத்தை நாம் எப்படி வாழ்ந்து காட்ட முடியும்? திருத்தந்தை பிரான்சிஸ் நம்மை உடல் சார்ந்த இரக்கச் செயல்கள், ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்களைப் பற்றி சிந்திக்க அழைக்கிறார்.
உடல் சார்ந்த இரக்கச் செயல்கள்
• பசித்திருப்பவர்க்கு உணவு கொடுத்தல்
• தாகமாய் இருப்பவர்க்கு தண்ணீர் கொடுத்தல்
• ஆடையின்றி இருப்பவர்க்கு உடை கொடுத்தல்
• அன்னியரை வரவேற்றல்
• நோயாளியை குணமாக்கல்
• சிறையிலிருப்போரை சந்தித்தல்
• இறந்தவரை அடக்கம் செய்தல்
ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்கள்
• ஆலோசனைக் கூறல்
• அறியாமையில் உள்ளவர்க்கு கற்பித்தல்
• பாவிகளை நன்னெறிபடுத்தல்
• துயருற்றோருக்கு ஆறுதல் அளித்தல்
• குற்றங்களை மன்னித்தல்
• நமக்குத் தீங்கு செய்தோரை பொறுமையாக ஏற்றுக்கொள்ளுதல்
• இறந்தோருக்காகவும், வாழ்வோருக்காகவும் செபித்தல்
இந்த இரக்கத்தின் ஆண்டின் தவக்காலத்தில் இறைவனின் இரக்கத்தை அனுபவிக்க, கொண்டாட அழைக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நாளும் விவிலியம் வாசிப்போம். ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்று இறை இரக்கத்தை அனுபவிப்போம். ஆண்டவருக்காக 24 மணிநேரம் என்ற திருத்தந்தையின் கூற்றை ஆராதனை வழிபாடு வழியாக நடைமுறைப்படுத்துவோம். இறை இரக்க கதவுகள் இருக்கின்ற திருத்தலங்களை சந்திப்போம். இறை இரக்கத்தை பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.