Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 14 எருசலேம் நோக்கியப் பயணம் முதல் அறிவிப்பு

நற்செய்திகள் நான்கும் இயேசுவை எருசலேம் நோக்கியப் பயணியாகவே சித்தரிக்கிறது. எருசலேம் தான் அவருடைய குறிக்கோளாகவும், அவருடைய உலக வாழ்க்கைப் பயணத்தின் கடை எல்லையாகவும் இருக்கிறது. இதில் யோவான் நற்செய்தியாளர் இயேசுவை பலமுறை எருசலேமில் போதிப்பவராகவும், பணி செய்பவராகவும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பாஸ்காவிற்கும் அவர் எருசலேமுக்குச் செல்வதாக குறிப்பிடுகிறார் யோவான் நற்செய்தியாளர். லூக்கா நற்செய்தியாளரும் இயேசுவை ஒரு சில முறைகள் எருசலேமில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். அவர் குழந்தையாக இருந்தபொழுது எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்டதை, இளம் வயதில் காணாமல் போன இயேசுவை எருசலேம் கோவிலில் கண்டுபிடித்ததைப் பற்றி லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு நற்செய்தியாளர் எருசலேமுக்கு இயேசு நேரடியாக செல்லவில்லை என்பதை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் எருசலேம் அருகிலுள்ள பெத்லகேமில் பிறந்ததனால் அங்கே சென்றிருக்கலாம் என யூகிக்கிறார். ஆனால் மாற்கு நற்செய்தியாளர் இயேசுவை ஒரே முறை தான் எருசலேமுக்குப் போகவைக்கிறார். அதுவும் தனது கலிலேயப் பணியை முடித்தப் பிறகு அவரது பயணம் எருசலேமை நோக்கித் தான் இருக்கிறது என்பதை மாற்கு குறிப்பிடுகிறார். இந்தப் பயணத்தைப் பற்றி மாற்கு நற்செய்தியிலே இயேசு மூன்று முறை முன்னறிவிக்கின்றார். ஒவ்வொரு அறிவிப்பின் போதும் சீடத்துவத்திற்கான முக்கியமான பண்புகளைப் பற்றியும் பேசுகின்றார்.

இயேசுவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் எருசலேமை நோக்கிச் செல்ல வேண்டும். மாற்கு 8:31-38 ல் அவருடைய எருசலேம் பயணத்தின் நிறைவாக தலைமைக் குருக்களாலும், மறைநூல் அறிஞர்களாலும் அவர் கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்று தன்னைப் பற்றி அவர் முன் அறிவிக்கிறார். அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்து கடிந்து கொள்கிறார். பேதுரு அவருடைய எருசலேம் பயணத்திற்குத் தடையாக இருக்கிறார். பேதுரு கலிலேயப் பணியையே முன்வைக்கிறார். ஏனென்றால் கலிலேயாவில் இயேசு பல புதுமைகளை செய்திருக்கிறார். மக்கள் அவரை பின்தொடர்ந்து கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். ஆகவே, சாவைப் பற்றி பேசுவதை பேதுருவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு இயேசு பேதுருவிடம் “என் கண்முன் நில்லாதே சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைப் பற்றி எண்ணாமல், மனிதருக்கு ஏற்றவைப் பற்றியே எண்ணுகிறாய்”(8:33) என்று கடிந்து கொள்கிறார். இதையே மத்தேயு நற்செய்தியிலே இயேசு: “நீ எனக்கு தடையாய் இருக்கின்றாய்” (மத் 16:23) என்று கூறுகிறார். ஆகவே, சாத்தான் என்பவன் கடவுள் சித்தத்திற்கு எதிராகச் செயல்படுபவன் என்றும், இயேசுவின் செயல்பாட்டுக்குத் தடையாக இருப்பவன் என்றும் குறிப்பிடுகிறார். நாமும் பலவேளைகளில் நம்முடைய எருசலேம் நோக்கியப் பயணத்தில் சாத்தான்களாக மாற முடியும் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. அதன்பின் இயேசு கூறுகிறார்: “என்னைப் பின்பற்ற விரும்புபவர் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றட்டும். ஏனெனில் தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார், என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதை காத்துக் கொள்வார் (8:34-35).

ஆக இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கொடுக்கிற பாடம்:

· தன்னலம் துறக்க வேண்டும்.

· சிலுவையைத் தூக்க வேண்டும்.

· இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.

· நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின் பொருட்டும் உயிரை இழக்க வேண்டும்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பும் சீடர்கள் எருசலேமை நோக்கிப் பயணிக்க வேண்டும். இயேசு இந்தப் பயணத்தில் முன் சென்றிருக்கிறார். எனவே, இயேசுவைப் பின்பற்றுதல் அடித்தளமானது. நற்செய்திக்காக வாழ்வையும் இழக்கத் துணிய வேண்டும். அதிலும் சிறப்பாக சிலுவையைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும். சிலுவை என்பது இயேசு எதற்காக சிலுவையைத் தூக்கினாரோ அதே பொருளை முன்வைக்கிறது. மக்களைப் பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக, மக்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவை மீட்டெடுப்பதற்காக, ஒரு விடுதலையின் அடையாளமாக சிலுவை இருக்கிறது இயேசுவுக்கு. ஆனால் மக்கள் பார்வையில் அது ஒரு இழிவுச் செயலாகவே கருதப்படுகிறது. இதைத் தான் பவுலடியார்: “சிலுவையைப் பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” (1கொரி 1:18).

அன்புக்குரியவர்களே! தவக்காலத்தின் இறுதியில் நாம் சிலுவை நிகழ்வுகளைப் பற்றித் தியானிக்க இருக்கிறோம். இந்த எருசலேம் நோக்கியப் பயணம் சிலுவையில் நிறைவு பெறும். சிலுவை (துன்பங்கள், பாவத்திற்கான பரிகாரம், இகழ்ச்சி) போன்றவை இன்றைய உலகில் நமக்கும் மடமையாகத் தான் தோன்றுகிறது. ஆனால், அதுதான் கடவுளின் வல்லமை என்பதை நம்புவோம். நம் சிலுவைகளைத் தூக்குவோம்.