நற்செய்திகள் நான்கும் இயேசுவை எருசலேம் நோக்கியப் பயணியாகவே சித்தரிக்கிறது. எருசலேம் தான் அவருடைய குறிக்கோளாகவும், அவருடைய உலக வாழ்க்கைப் பயணத்தின் கடை எல்லையாகவும் இருக்கிறது. இதில் யோவான் நற்செய்தியாளர் இயேசுவை பலமுறை எருசலேமில் போதிப்பவராகவும், பணி செய்பவராகவும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பாஸ்காவிற்கும் அவர் எருசலேமுக்குச் செல்வதாக குறிப்பிடுகிறார் யோவான் நற்செய்தியாளர். லூக்கா நற்செய்தியாளரும் இயேசுவை ஒரு சில முறைகள் எருசலேமில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். அவர் குழந்தையாக இருந்தபொழுது எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்டதை, இளம் வயதில் காணாமல் போன இயேசுவை எருசலேம் கோவிலில் கண்டுபிடித்ததைப் பற்றி லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு நற்செய்தியாளர் எருசலேமுக்கு இயேசு நேரடியாக செல்லவில்லை என்பதை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் எருசலேம் அருகிலுள்ள பெத்லகேமில் பிறந்ததனால் அங்கே சென்றிருக்கலாம் என யூகிக்கிறார். ஆனால் மாற்கு நற்செய்தியாளர் இயேசுவை ஒரே முறை தான் எருசலேமுக்குப் போகவைக்கிறார். அதுவும் தனது கலிலேயப் பணியை முடித்தப் பிறகு அவரது பயணம் எருசலேமை நோக்கித் தான் இருக்கிறது என்பதை மாற்கு குறிப்பிடுகிறார். இந்தப் பயணத்தைப் பற்றி மாற்கு நற்செய்தியிலே இயேசு மூன்று முறை முன்னறிவிக்கின்றார். ஒவ்வொரு அறிவிப்பின் போதும் சீடத்துவத்திற்கான முக்கியமான பண்புகளைப் பற்றியும் பேசுகின்றார்.
இயேசுவினுடைய மூன்றாம் அறிவிப்பு மாற்கு நற்செய்தியில் 10ம் அதிகாரத்தில் காணப்படுகின்றது (10:32-34). இதே மூன்றாம் அறிவிப்பு மத்தேயு நற்செய்தியில் 20:17-19லும், லூக்கா நற்செய்தியில் 18:31-34லும் காணப்படுகிறது. இதில் மாற்கும், மத்தேயுவும் இந்த அறிவிப்புக்குப் பின் செபதேயுவின் மக்கள் இயேசுவிடம் ஒரு வேண்டுகோளை வைப்பது போலவும், மத்தேயு நற்செய்தியில் செபதேயுவின் மனைவி ஒரு வேண்டுகோள் வைப்பது போலவும் எழுதுகிறார். மாற்கு நற்செய்தியில் செபதேயுவின் புதல்வர்கள் “நீர் அரியணையில் இருக்கும்பொழுது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும், இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று கேட்கின்றார்கள் (மாற்கு 10:37). இயேசு தன்னுடைய பாடுகளைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் அறிவித்து கொண்டிருக்கிற வேளையில் இவ்விருவரும் பதவியைப் பற்றியும், ஆட்சியில் தங்களுடைய பொறுப்புகளைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் சீடர்கள் கொடுக்கிற பதிலாக இருக்கிறது.
அதே நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர் செபதேயுவின் மனைவி அதாவது யோவான், யாக்கோபுவின் தாய் இந்தப் பதவியையும், பொறுப்புகளையும் கேட்பது போல எழுதுகிறார். நீர் ஆட்சிபுரியும் பொழுது எம் மக்களாகிய இவர்களுள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும், இன்னொருவர் இடப்புறமும் அமரச் செய்யும்” (மத் 20:21). ஒருவேளை மத்தேயு நற்செய்தியாளர் பழியை சீடர்கள் மேல் போடாது அதை அவர்களுடைய தாயின்மீது போடுகிறார். சீடர்களை நல்லவர்களாக காட்டுவதற்காக இவ்வாறு செய்தாரா? இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சீடர்களோ அல்லது அவர்களுடைய தாயோ பதவிக்கும், பொறுப்புக்கும், அதிகாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது இவர்களுடைய புரியாமையை வெளிப்படுத்துகிறது. இறையாட்சியையோ, இறையாட்சியின் விழுமியங்களையோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே தான் இயேசு பன்னிரெண்டு சீடர்களையும் தன்னிடம் அழைத்து இறையாட்சியில் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என போதிக்கிறார். அவர் கூறுகிறார் மற்ற இனத்தவர் மக்களை அடக்கி ஆள்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் எனவும், தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் காட்டிக் கொள்கிறார்கள் (காண் மாற்கு 10: 42-43).
ஆனால் இறையாட்சித் தலைமைத்துவத்தில் பணியாளராக இருக்கவும், தொண்டாற்றவும், பிறர் மீட்புக்காக தனது உயிரையே ஈடாக கொடுக்கவும் இருக்க வேண்டும். இறையாட்சியில் அதிகாரம் செலுத்துவது கிடையாது. முதல்வன் கடையவன் என்ற பாகுபாடு கிடையாது, போட்டிப் பொறாமைகள் கிடையாது, பதவிகள் பட்டங்கள் கிடையாது, ஏன் ஒழுங்குகள் சட்டங்கள் கூட கிடையாது. இறையாட்சி என்பது ஒரு இயக்கம். அந்த இயக்கத்தில் அனைவரும் உள்ளடக்கப்படுகிறார்கள். யாவரும் சமமே. எல்லோரும் பணி செய்கிறார்கள். பணியினுடைய நிறைவு மீட்புப் பெறுவதற்காகவே.
ஆம் அன்புக்குரியவர்களே! இயேசு தன்னுடைய எருசலேம் வழிப்பயணத்தில் தன்னுடைய பாடுகளையும், இறப்பையும், உயிர்ப்பையும் முன் அடையாளமாக குறிப்பிட்டுச் சொல்லும்பொழுது அவர் சீடர்களுக்குப் போதிக்கின்ற பாடங்கள் அற்புதமானவை. சீடர்கள் இயேசு என்ற நபரைத் தான் பின்பற்ற வேண்டும், குறிக்கோள்களை, சட்டங்களை, ஒழுங்குகளை, பதவிகளை, அதிகாரத்தை அல்ல. இயேசு என்ற நபரை பின்பற்ற வேண்டும். அந்த நபரை பின்பற்றுவது என்பது சிலுவை சுமக்கின்றப் பயணம், தன்னை மறக்கின்றப் பயணம், பிறருக்கு பணிசெய்கின்றப் பயணம், பிறருக்காகத் தன்னை அழிக்கின்றப் பயணம். நம்முடைய தவக்காலப் பயணம் இந்த நிலைபாட்டில் இருக்கிறதா?