Arulvakku

தவக்காலச் சிந்தனைகள் – 18 இயேசு எருசலேமில் நுழைதல் – 2

Posted under Reflections on March 20th, 2016 by

தனது பாடுகள், இறப்பு ஆகியவைகளுக்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பாக இயேசு வெளிப்படையாக எருசலேமுக்குள் நுழைகிறார். இது அவர் தீயசக்திக்கோ அல்லது எதிரிகளுக்கோ பயப்படாது துணிந்து செல்வதை குறிப்பிடுகிறது. அவர் பயந்து அஞ்சி மறைந்து செல்லவில்லை. துன்பங்களுக்கோ, சாவுக்கோ அவர் பயப்படவுமில்லை. அவர் வெளிப்படையாக மட்டும் வரவில்லை. அதோடு கூட மகிழ்ச்சியாகவும், ஒரு விழாகோலத்தோடும் அவர் எருசலேமுக்குள் நுழைகிறார். அவருடைய எருசலேம் நுழைவானது ஒரு வெற்றிப் பயணமாக மாற்கு நற்செய்தியில் குறிப்பிடப்படுகிறது.

மேலோட்டமாக பார்க்கும்பொழுது கழுதைக் குட்டி மேல் அவர் அமர்ந்து செல்வது ஒரு இழிவாகத் தோன்றலாம். கழுதைக் குட்டி மேல் இதுவரை யாரும் அமர்ந்ததில்லை என்று சொல்வது அது பழக்கப்படாத ஒரு விலங்காக இருக்கிறது. மேலும் கடினமானது. இதுவரை யாரும் அதில் பயணம் செய்யாததால் அது யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாத ஒன்றாக இருக்கிறது. அந்த கழுதைக் குட்டியானது அவருக்கு சொந்தமானது கூட அல்ல. வேறொருவரிடமிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டது போல் இருக்கிறது. இயேசு தன்னுடைய பொது வாழ்வில் இதுபோல பிறருக்கு சொந்தமானவைகளைத் தான் பயன்படுத்துகிறார். அவர் போதிக்கும் போது கூட தனக்கு சொந்தமில்லாத படகில் ஏறி போதிக்கிறார். தனக்கு சொந்தமில்லாத கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார். அதே போல இங்கும் தனக்கு சொந்தமில்லாத கழுதைக் குட்டியின் மேல் பயணிக்கிறார். ஒருவேளை பிறரை நாடி, பிறரை சார்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறாரா? கிறிஸ்தவ வாழ்வு அல்லது சீடத்துவ வாழ்வு என்பது பிறரை சார்ந்து, பிறரோடு இணைந்து வாழக்கூடிய வாழ்வாக கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும், அந்த கழுதைக் குட்டியின் மேல் கூடியிருந்த மக்கள் தங்கள் துணிகளை போடுகிறார்கள். அவரோடு திரண்டிருந்த மக்களெல்லாம் ஏழைகளாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழைகள் தங்களுக்கென்று இருந்த துணிகளைத் தான் கழுதைக் குட்டியின் மேல் போடுகிறார்கள். இயேசு மக்கள் நிலைக்குச் செல்கிறார். அவர்களுடைய எளிமை நிலையை ஏற்றுக் கொள்கிறார். அவர்களை சார்ந்து வாழ்கிறார். அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வை முன்வைக்கிறார்.

இதே நிகழ்வை கொஞ்சம் ஆழமாக, உள்நோக்கிப் பார்க்கும் பொழுது இது இறைவார்த்தையின் நிறைவாகக் கூறப்படுகிறது மத்தேயு நற்செய்தியில். மத்தேயு 21:4-5ல் நற்செய்தியாளர் செக்கரியா இறைவாக்கினர் 9:9 இந்த நிகழ்வில் நிறைவேறுவதாக கூறுகிறார்: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசன் உன்னிடம் வருகிறார். அவர் எளிமை உள்ளவர், கழுதையின் மேல் ஏறி வருகிறார்@ கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்.” ஆக இயேசுவின் வருகை இறைவார்த்தையின் நிறைவு, அது ஒரு அரசனுடைய வருகை, அது ஒரு எளிமையானவரின் வருகை, அது ஒரு சமாதானத்தின் வருகை (போர் வீரனைப் போல் குதிரையில் வரவில்லை).

இயேசு எல்லாம் தெரிந்தவரைப் போல் உள்ளே நுழைகிறார் (மாற்கு 11:1-3). கழுதைக் குட்டி முன்னே வைத்திருக்கிற இடத்தை இவர் அறிந்திருக்கிறார், அதை அவிழ்த்து வர உத்தரவிடுகிறார், யாரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதற்கான பதிலையும் சொல்லி அனுப்புகிறார். ஆனால் நமக்குத் தெரியும் இதுதான் இயேசுவினுடைய முதல் பயணம் எருசலேமுக்குள். பின்வரும் எல்லா நிகழ்வுகளையும் அறிந்தவர் போல் அவர் செல்கிறார். மாற்கு 11:4 ல் இரண்டு சாலைகள் சந்திக்கின்ற தெருவில் இருக்கும் என்று சொல்கிறார். சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவது போல தோன்றுகிறது. அவரோடு பின்வருகின்ற மக்கள் ஓசன்னா என்று பாடி அவரை அழைத்துச் செல்கின்றார்கள். அவர்களும் மீட்பின் வரலாற்றைப் பாடியே அவரை அழைத்துச் செல்கிறார்கள். ஆண்டவர் பெயரால் வருகிறவர் பேறுபெற்றவர் என பாடுகிறார்கள். வரவிருக்கும் தன் தந்தையின் அரசு பேறுபெற்றது என சொல்கிறார்கள். உன்னதத்தில் ஓசன்னா என ஆர்ப்பரிக்கிறார்கள். ஆக, இயேசுவின் வருகையானது ஒரு அரசாட்சியை முன்வைக்கிற, அதுவும் தாவீதின் வழியில் வரும் அரசாட்சியை முன்வைக்கிறது. இந்த அரசாட்சியின் வருகையால் மக்களுக்கு மீட்பு கிடைக்கிறது. இந்த மீட்பானது விண்ணகத்தில் பெரும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது.

ஆம் அன்புக்குரியவர்களே! இயேசுவின் எருசலேம் வருகை ஏதோ ஒரு வழக்கமான, இயல்பான செயலாக இங்கே முன்வைக்கப்படவில்லை. வெளிப்படையாகப் பார்க்கும் பொழுது அது ஒரு இயல்பான செயலாகத் தோன்றினாலும,; அது உள்ளடக்கியிருக்கிற பொருள்கள் ஆழமானவை. அது ஒரு மீட்பரின் வரவு. அது ஒரு அரசனின் வரவு. அது ஒரு அமைதி அரசரின் வரவு. அது ஒரு தாவீதின் மரபில் வந்த அரசரின் வரவு. இந்த அரசர் மக்களுக்கு மீட்பு கொடுப்பதற்காக வருகிறார். நடக்கவிருக்கும் அனைத்தையும் அறிந்து தெரிந்தவராயிருக்கிறார். இந்த மீட்புச் செயலின் வழியாக விண்ணகம் ஆர்ப்பரிக்கின்றது. இதே இயேசுவை பின்பற்றுகிற நாம் அந்த மக்களைப் போல் மீட்பின் பாடலைப் பாடுவோம். நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவோம். மீட்பை கொடையாகப் பெறுவோம். இறையுறவில் நிறைவு பெறுவோம்.

தவக்காலச் சிந்தனைகள் – 17 இயேசு எருசலேமில் நுழைதல்

Posted under Reflections on March 20th, 2016 by

மாற்கு நற்செய்தியில் இயேசு முதல்முறையாக எருசலேமுக்குள் நுழைகிறார் (11ம் அதிகாரம்). இதுவரை எருசலேமைப் பற்றி அவர் கேட்ட எல்லா நல்ல செய்திகளையும் மனதில் கொண்டவராக நுழைந்திருக்க வேண்டும். எருசலேமின் மகிமை, பெருமை, இறைப்பிரசன்னம் போன்றவைகள் அவரது மனதிலே ஆழப் பதிந்திருக்க வேண்டும். எருசலேமில் நுழைந்த உடன் நேரடியாக அவர் கோவிலுக்குள் செல்கிறார். அதைச் சுற்றி பார்த்துவிட்டு மாலை நேரம் ஆனதால் உடனே பெத்தானியா திரும்பி விடுகிறார். ஆக எருசலேம் கோவிலை ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்த்தாரா? அந்த நாள் முழுவதும் கோவிலில் அவர் என்ன செய்திருந்திருப்பார்? மீண்டும் இரண்டாம் நாள் அவர் எருசலேமுக்குச் செல்கிறார். செல்கின்ற வழியிலே பசுமையான அத்திமரத்தைப் பார்க்கிறார். பழம் தேடிச் செல்கிறார். அத்திப் பழம் இல்லாததால் மரத்தை சபித்துவிட்டு எருசலேமுக்குச் செல்கிறார். எருசலேமுக்குச் சென்றவர் மீண்டும் கோவிலுக்குத் தான் செல்கிறார். கோவிலில் நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். “இது என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” என்றுக் கூறி அங்கிருந்து மீண்டும் பெத்தானியாவிற்கு வந்து விடுகிறார். மறுநாள் காலை மீண்டும் மூன்றாம் முறையாக எருசலேமை நோக்கிச் செல்கிறார். பட்டுப்போயிருந்த அத்திமரத்தைக் கண்டு சீடர்கள் அவரிடம் கூறுகிறார்கள்.

ஆக, இயேசு மூன்று முறை எருசலேமுக்குச் செல்கிறார். மூன்றாவது முறையாக சென்றபோது அவர் திரும்பி வருவதே கிடையாது. இந்த மூன்று நாள்களும் அவர் இரவு ஓய்வுக்கு பெத்தானியா திரும்பி விடுகிறார், எருசலேமில் தங்கவில்லை. பெத்தானியா என்ற எபிரேயச் சொல்லுக்கு ‘ஏழைகளின் வீடு’ என்று பொருள். ஆக, இயேசு ஏழைகளோடு தான் தங்குகிறார், ஏழைகளின் வீட்டில் தான் தங்குகிறார்.

இயேசு செய்தப் புதுமைகளிலே அத்திமரத்தை சபிப்பதுதான் ஒரு எதிர்மறைப் புதுமையாக இருக்கிறது. எல்லாப் புதுமைகளுமே நன்மை பயக்குகின்றவையாக இருக்க வேண்டும் (குணமளித்தல், பேய் ஓட்டுதல், உயிர்ப்பித்தல்). இதனாலேதான் விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள் இது ஒரு புதுமையாக்கப்பட்ட ஒரு உவமை என்று. அத்திமரத்தை சபிப்பதும் அது பட்டுப்போவதும் ஒரு செய்தியை சொல்கிறது. அந்த செய்தி தான் எருசலேம் கோவிலில் வாழ்ந்து காட்டப்படுகிறது.

ஒருவர் அத்திமரத்திற்குச் செல்லும் பொழுது கனிகளைத் தேடித் தான் செல்வார்கள். அதே போல கோவிலுக்குச் செல்லும் பொழுது அங்கே வேண்டலையும், நம்பிக்கையையும் தான் எதிர்பார்ப்பார்கள். அத்திமரம் பசுமையாக இருக்கிறது. இலைகள் அதிகம் இருந்து பார்ப்பவர்களை வரவேற்கிறது. அதேபோல எருசலேம் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது, விற்பதும், வாங்குவதும் போன்ற பணிகள் அதிகமாக இருக்கின்றன, பார்ப்பதற்கும் பெருமையாக இருக்கிறது. அத்திமரத்தில் கனிகள் இல்லை, எருசலேம் கோவிலில் செபம் இல்லை, நம்பிக்கை இல்லை. அத்திமரத்தை சபிக்கிறார், எருசலேம் கோவிலை சுத்தம் செய்கிறார். ஆகவே, அத்திமரத்தை சபித்தல் எருசலேம் கோவில் சுத்தப்படுத்துவதற்கான ஒரு உவமையாக இருந்திருக்கலாம். காலப்போக்கில் அது ஒரு புதுமையாக விளக்கப்பட்டிருக்கிறது.

எருசலேம் கோவில் கட்டப்பட்ட இடம் அபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலியிடச் சென்ற இடமாக மரபு சொல்கிறது. அதேபோல் அந்த மலையின் அடியில் உள்ள குகையில் தான் தாவீது சவுலால் விரட்டப்பட்டப் பொழுது தனித்திருந்து இரவு முழுவதும் செபித்தாராம். ஆகவே, எருசலேம் கோவில் அபிரகாம் கடவுள் மேல் கொண்டிருந்த நம்பிக்கையை அடித்தளமாக கொண்டிருக்கிறது. அதேபோல் தாவீது அரசனின் செபத்தை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. இந்த இறைவேண்டலும், இறைநம்பிக்கையும் தான் கோவிலின் அடித்தளமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் செபத்தை மறந்து, இறைநம்பிக்கையை இழந்து, பொருள்களை விற்பதும் வாங்குவதுக்குமான வணிகத்தளமாக மாறிவிட்டது. இதுதான் இயேசுவை கோவிலை சுத்தம் செய்யத் தூண்டுகிறது. இயேசுவும் இதே எதிர்பார்ப்புடன் தான் எருசலேமுக்குள் வந்திருக்க வேண்டும். தன்னுடைய எதிர்பார்ப்புகள் நிகழவில்லை என்ற ஏமாற்றத்தில் அவர் கோவிலை சுத்தம் செய்கிறார். இதன் முடிவாக அவர் போதிக்கின்ற பாடம் “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றை பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்@ நீங்கள் கேட்டபடியே நடக்கும்” (மாற்கு 11:24). செபத்தோடு கூடிய நம்பிக்கையை இயேசு முதல் போதனையாக முன்வைக்கிறார்.

அன்புக்குரியவர்களே! தவக்காலத்தின் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம், பாஸ்கா விழாவின் நிகழ்வுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நாள்களில் நமது இறைவேண்டல்கள் நம்பிக்கையோடு கூடிய இறைவேண்டல்களாக இருக்கின்றனவா? என்று ஆய்வு செய்து பார்ப்பது அவசியமானது. இல்லையேல் நாமும் அதே இயேசுவால் சுத்திகரிக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

1 1,409 1,410 1,411 1,412 1,413 2,555